மத வலி யானை

 
354. முல்லை
மத வலி யானை மறலிய பாசறை,
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
5
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து,
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
10
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?

வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்