மன்று பாடு அவிந்து

 
128. குறிஞ்சி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
5
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
10
கான நாடன் வரூஉம், யானைக்
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
15
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்