மாதிரம் புதையப் பாஅய்

 
364. முல்லை
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
5
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
முல்லை இல்லமொடு மலர, கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
கார் தொடங்கின்றே காலை; காதலர்
10
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்