மான்றமை அறியா

 
238. குறிஞ்சி
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
5
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து,
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
10
பெருங் கல் நாட! பிரிதிஆயின்,
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
15
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து,
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர்