மௌவலொடு மலர்ந்த

 
117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........