வண்டு படத் ததைந்த

 
1. பாலை
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
5
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
10
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
15
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?

பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்