வஞ்சி

216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
5
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
10
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
15
பெருங் களிற்று எவ்வம் போல,
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்

226. மருதம்
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
நாண் இலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
5
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
10
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
15
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்