வேலமரம்(உலவை)

89. பாலை
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
5
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
10
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
15
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
20
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர்

293. பாலை
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்தனைய ஆக, பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
5
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி,
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
10
செல்ப என்ப தோழி! யாமே,
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்