குறிஞ்சி

308. குறிஞ்சி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
5
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
10
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
15
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.

இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார்