அவரை

104. முல்லை
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
5
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
10
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
15
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!

வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்

217. பாலை
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
துவலை தூவல் கழிய, அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
5
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
10
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
15
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறு தீப் பிறப்பத் திருகி,
20
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்

294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
5
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
10
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
15
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.

பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்