ஈங்கை

243. பாலை
அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
5
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
10
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
15
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!

தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்

294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
5
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
10
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
15
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.

பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்

306. மருதம்
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
5
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
10
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி,
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
15
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்