கரும்புப்பூ

13. பாலை
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
10
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
15
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
20
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!

பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார்

235. பாலை
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
5
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
10
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
15
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்