கருவிளை

255. பாலை
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்

294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
5
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
10
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
15
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.

பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்