குவளை(காவி) |
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் |
|
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
|
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
|
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை |
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் |
|
கானம் கடிய என்னார், நாம் அழ, |
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், |
|
5 |
செல்ப" என்ப' என்போய்! நல்ல |
மடவைமன்ற நீயே; வடவயின் |
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, |
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் |
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன |
|
10 |
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் |
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் |
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, |
|
15 |
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
குருதியொடு துயல்வந்தன்ன நின் |
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
|
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார் | |
உரை |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
|
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
|
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
|
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
|
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற |
|
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
|
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், |
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன |
|
5 |
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி |
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, |
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், |
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று |
|
10 |
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் |
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற் |
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி |
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் |
|
15 |
கடவுள் எழுதிய பாவையின், |
மடவது மாண்ட மாஅயோளே. |
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, |
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி |
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை |
|
ஆலி அன்ன வால் வீ தாஅய், |
|
5 |
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் |
தாது உறு குவளைப்போது பிணி அவிழ, |
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் |
|
கடாஅம் மாறிய யானை போல, |
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ |
|
10 |
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, |
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் |
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, |
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை; |
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற |
|
15 |
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் |
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் |
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த |
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், |
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற |
|
20 |
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த |
பீடு இல் மன்னர் போல, |
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. |
|
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; |
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே |
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம் |
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. |
|
5 |
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி |
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் |
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, |
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் |
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, |
|
10 |
கான நாடன் வரூஉம், யானைக் |
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, |
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு, |
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், |
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் |
|
15 |
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் |
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; |
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, |
|
5 |
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் |
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, |
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் |
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, |
|
10 |
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் |
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; |
|
'வாரார்கொல்?' எனப் பருவரும் |
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, |
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, |
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி |
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், |
|
5 |
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு |
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் |
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, |
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, |
|
10 |
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, |
|
'தருமணற் கிடந்த பாவை என் |
|
அருமகளே என முயங்கினள் அழுமே! |
|
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... | |
உரை |
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், |
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, |
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி |
|
5 |
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் |
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் |
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர, |
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் |
|
10 |
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், |
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் |
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப, |
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
|
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் |
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும், |
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் |
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் |
|
5 |
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று |
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, |
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, |
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, |
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, |
|
10 |
காலை வந்தன்றால் காரே மாலைக் |
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி |
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் |
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, |
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு |
|
15 |
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? |
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார் | |
உரை |
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
|
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
|
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் | |
உரை |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
|
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
|
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் | |
உரை |
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
|
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
|
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் |
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் |
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, |
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், |
|
5 |
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! |
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், |
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை |
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, |
|
10 |
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் |
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய |
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, |
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய |
|
15 |
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
|
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் | |
உரை |
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின், |
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை |
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர் |
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி, |
|
5 |
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் |
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை |
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய், |
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு, |
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி, |
|
10 |
அன்னை வினவினள்ஆயின், அன்னோ! |
என் என உரைக்கோ யானே துன்னிய |
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி, |
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த |
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும் |
|
15 |
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், |
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, |
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், |
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை |
|
5 |
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், |
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து |
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என |
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், |
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! |
|
10 |
கரியாப் பூவின் பெரியோர் ஆர, |
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை |
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, |
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, |
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை |
|
15 |
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், |
எவ்வம் கூர, இறந்தனம், யாமே. |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, |
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, |
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் |
|
5 |
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, |
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை |
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, |
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் |
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, |
|
10 |
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் |
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, |
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, |
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, |
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, |
|
15 |
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், |
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், |
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் |
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி |
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், |
|
20 |
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் |
நீடலர் வாழி, தோழி! தோடு கொள் |
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, |
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி, |
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் |
|
25 |
வேனில் அதிரல் வேய்ந்த நின் |
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
தண் கயம் பயந்த வண் காற் குவளை |
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, |
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் |
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின், |
|
5 |
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை |
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், |
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, |
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, |
|
10 |
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், |
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, |
|
ஆடு கழை இரு வெதிர் நரலும் |
|
15 |
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |