கொன்றை

4. முல்லை
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.

தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்

115. பாலை
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
5
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
10
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
15
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.

பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

197. பாலை
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
5
இனையல் வாழி, தோழி! முனை எழ
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
மறம் மிகு தானை, கண்ணன் எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
10
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல்
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு,
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
15
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி,
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார்

364. முல்லை
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
5
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
முல்லை இல்லமொடு மலர, கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
கார் தொடங்கின்றே காலை; காதலர்
10
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

398. குறிஞ்சி
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
5
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
10
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
15
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
20
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
25
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!

காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார்