நெய்தல்

10. நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.

இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்

70. நெய்தல்
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
5
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
10
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
15
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
5
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
10
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
15
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!

தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்

119. பாலை
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
5
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
10
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
15
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
20
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்

130. நெய்தல்
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
5
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
10
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.

கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார்

150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
5
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
10
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
'வாரார்கொல்?' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!

 
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்

160. நெய்தல்
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
5
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
10
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
15
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.

தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்

170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
5
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
10
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.

தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

230. நெய்தல்
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
5
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
10
தீதும் உண்டோ, மாதராய்?' என,
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
15
சிறிய இறைஞ்சினள், தலையே
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

240. நெய்தல்
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
5
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
10
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி,
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
15
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.

தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார்

290. நெய்தல்
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
5
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
10
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
மணவா முன்னும் எவனோ தோழி!
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
15
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்

350. நெய்தல்
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
5
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
10
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
15
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்

360. நெய்தல்
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி,
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
5
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப,
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின், மற்று இவள்
10
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால்,
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
15
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
நல் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார்

370. நெய்தல்
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே,
5
காயல் வேய்ந்த தேயா நல் இல்
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்
10
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல்
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
15
ஆடு மகள் போலப் பெயர்தல்
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!

பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார்

400. நெய்தல்
நகை நன்று அம்ம தானே 'அவனொடு,
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து,
கானல் அல்கிய நம் களவு அகல,
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை,
5
நூல் அமை பிறப்பின், நீல உத்தி,
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு
10
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ,
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி,
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி,
15
பால் கண்டன்ன ஊதை வெண் மணல்,
கால் கண்டன்ன வழி படப் போகி,
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை,
20
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு,
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங் கள் நாற, பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்,
25
பாடு எழுந்து இரங்கு முந்நீர்,
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!

தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார்