பாதிரி

191. பாலை
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
5
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
10
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
15
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?

தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

237.பாலை
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
5
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
10
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
15
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்

257. பாலை
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
5
பொம்மல் ஓதி பொதுள வாரி,
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
10
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
15
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
20
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயினானே.

உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்

261. பாலை
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
5
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
10
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
15
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.

புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ