பிச்சி(பித்திகம்)

42. குறிஞ்சி
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
5
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
10
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே

தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்

295. பாலை
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
5
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்தி,
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
10
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
15
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
20
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்