மரா மலர்(கடம்பமலர்)

99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
5
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
10
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!

உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

172. குறிஞ்சி
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
5
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்;
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
10
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
15
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின்
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய,
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

199. பாலை
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
5
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
10
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
15
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
20
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார்

211. பாலை
கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
5
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
10
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
15
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார்

221. பாலை
நனை விளை நறவின் தேறல் மாந்தி,
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
5
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்,
மதி உடம்பட்ட மை அணற் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து,
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின்
தண் நறு முச்சி புனைய, அவனொடு
10
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும் பிடி இரியும் சோலை
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.

தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்

257. பாலை
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
5
பொம்மல் ஓதி பொதுள வாரி,
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
10
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
15
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
20
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயினானே.

உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்