மல்லிகை

268. குறிஞ்சி
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
5
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
10
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!

குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்