பாகல்கனி

15. பாலை
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
5
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
10
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
15
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!

மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்

177. பாலை
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
5
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
10
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
15
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
20
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்