காக்கை

170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
5
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
10
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.

தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

313. பாலை
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
5
ஐய ஆக வெய்ய உயிரா,
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து,
10
வருவர் வாழி, தோழி! பெரிய
நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
15
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
இல் வழிப் படூஉம் காக்கைக்
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

319. பாலை
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
5
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
10
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின்
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
15
'செல்வேம்' என்னும் நும் எதிர்,
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!

செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

327. பாலை
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல,
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
5
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
10
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை,
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
15
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்