பருந்து(எருவை, கழுகு) |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் |
|
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
|
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
|
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை |
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் |
|
கானம் கடிய என்னார், நாம் அழ, |
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், | |
5 |
செல்ப" என்ப' என்போய்! நல்ல |
மடவைமன்ற நீயே; வடவயின் |
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, |
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் |
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன |
|
10 |
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் |
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் |
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, |
|
15 |
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
குருதியொடு துயல்வந்தன்ன நின் |
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
|
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார் | |
உரை |
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் |
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, |
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என, |
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, |
|
5 |
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து |
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு, |
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, |
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், |
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன |
|
10 |
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் |
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி, |
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு |
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் |
|
தமிழ் கெழு மூவர் காக்கும் |
|
15 |
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. |
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, |
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, |
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து |
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, |
|
5 |
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் |
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் |
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் |
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் |
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் |
|
10 |
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் |
வெம் பரல் அதர குன்று பல நீந்தி, |
|
யாமே எமியம் ஆக, நீயே |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது |
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, |
|
15 |
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், |
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் |
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. |
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் |
|
செய்வினை ஆற்றுற விலங்கின், |
|
20 |
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? |
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் |
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; |
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும் |
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் |
|
5 |
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, |
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய |
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, |
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, |
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு |
|
10 |
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், |
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, |
|
கண்டது நோனானாகி, திண் தேர்க் |
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த |
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி |
|
15 |
அழும்பில் அன்ன அறாஅ யாணர், |
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, |
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, |
|
தண் குடவாயில் அன்னோள் |
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, |
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, |
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, |
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, |
|
5 |
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி |
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, |
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, |
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி |
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் |
|
10 |
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, |
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் |
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் |
|
மனைமுதல் வினையொடும் உவப்ப, |
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே. |
|
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் | |
உரை |
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, |
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென |
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு |
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை |
|
5 |
அவை புகு பொருநர் பறையின், ஆனாது, |
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், |
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், |
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், |
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, |
|
10 |
ஆதிமந்தி பேதுற்று இனைய, |
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் |
|
அம் தண் காவிரி போல, |
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
|
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் | |
உரை |
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் |
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, |
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், |
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய |
|
5 |
வன் புலம் துமியப் போகி, கொங்கர் |
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் |
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் |
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் |
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, |
|
10 |
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர |
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை |
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, |
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் |
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர, |
|
15 |
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, |
கல் பிறங்கு அத்தம் போகி, |
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே. |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
|
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
|
மை எழில் உண்கண் கலுழ |
|
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
|
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
|
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
|
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... | |
உரை |
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி |
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் |
|
அடி அமை பகழி ஆர வாங்கி; |
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, |
|
5 |
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி |
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் |
|
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து |
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் |
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு |
|
10 |
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், |
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் |
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த |
|
நல் வரல் இள முலை நனைய; |
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ. |
|
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார் | |
உரை |
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை |
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் |
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி |
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், |
|
5 |
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் |
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண |
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் |
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து |
|
வருதும்' என்றனர் அன்றே தோழி! |
|
10 |
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் |
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த |
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என |
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, |
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் |
|
15 |
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், |
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு |
|
மண் பயம் பூப்பப் பாஅய், |
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே? |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார். | |
உரை |
கான் உயர் மருங்கில் கவலை அல்லது, |
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர் |
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, |
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், |
|
5 |
பொறித்த போலும் வால் நிற எருத்தின், |
அணிந்த போலும் செஞ் செவி, எருவை; |
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து |
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, |
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி |
|
10 |
கொல் பசி முது நரி வல்சி ஆகும் |
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப் |
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, |
|
முருந்து ஏர் முறுவல், இளையோள் |
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. |
|
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், |
|
வேறு பல் மொழிய தேஎம் முன்னி, |
|
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு |
|
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, |
|
5 |
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, |
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல |
|
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த |
|
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, |
|
கொடுமரம் பிடித்த கோடா வன்கண், |
|
10 |
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், |
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, |
|
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் |
|
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, |
|
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, |
|
15 |
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், |
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு |
|
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே. |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன் | |
உரை |
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
|
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
|
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், |
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, |
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, |
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் |
|
5 |
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, |
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், |
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து |
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் |
|
10 |
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், |
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், |
|
எழுதியன்ன கொடி படு வெருகின் |
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, |
|
15 |
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு |
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் |
|
வெரு வரு கானம், நம்மொடு, |
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே? |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த |
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய |
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும், |
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே |
|
5 |
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை |
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு, |
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன் |
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய், |
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம், |
|
10 |
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, |
வைகு நிலை மதியம் போல, பையென, |
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த |
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா, |
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் |
|
15 |
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, |
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி, |
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு, |
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு |
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா, |
|
20 |
பருவரல் எவ்வமொடு அழிந்த |
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே. |
|
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; |
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் |
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது |
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை |
|
5 |
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் |
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், |
|
ஏவல் இளையர் தலைவன், மேவார் |
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் |
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, |
|
10 |
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ |
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் |
|
வரையரமகளிரின் அரியள், |
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
உரை |
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, |
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, |
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, |
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், |
|
5 |
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் |
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் |
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, |
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் |
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த |
|
10 |
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் |
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த |
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, |
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் |
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் |
|
15 |
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய |
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, |
|
எய்த வந்தனரே தோழி! மை எழில் |
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண் |
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் | |
உரை |
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் |
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை! |
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் |
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் |
|
5 |
கல்லா இளையர் கலித்த கவலை, |
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் |
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், |
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த |
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், |
|
10 |
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் |
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி |
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், |
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, |
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, |
|
15 |
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், |
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் |
|
நோய் இலர் பெயர்தல் அறியின், |
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார் | |
உரை |
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் |
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, |
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும் |
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, |
|
5 |
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் |
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, |
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் |
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை, |
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை |
|
10 |
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, |
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து, |
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் |
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார் |
|
முனை அரண் கடந்த வினை வல் தானை, |
|
15 |
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய |
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல, |
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து, |
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண, |
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை |
|
20 |
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் |
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார் | |
உரை |
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, |
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, |
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக் |
|
5 |
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் |
எளியவாக, ஏந்து கொடி பரந்த |
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத் |
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத் |
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை |
|
10 |
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, |
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் |
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, |
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் |
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் |
|
15 |
கோடை வெவ் வளிக்கு உலமரும் |
புல் இலை வெதிர நெல் விளை காடே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
மேல் |