மின்மினி

72. குறிஞ்சி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
5
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
10
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
15
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
20
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.

தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார்

291. பாலை
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
உலறி இலை இலவாக, பல உடன்
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
5
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
10
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
15
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
20
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
நல் எழில், மழைக் கண், நம் காதலி
25
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே.

பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ