பனங்குருத்தால் குடை செய்து பயன்படுத்தியுள்ளனர்

121. பாலை
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
5
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
10
தான் வரும் என்ப, தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
15
கரு முக முசுவின் கானத்தானே.

தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்