நித்திலக்
கோவை
பதிப்புரை
அகத்தே
நிகழும் இன்பம் ‘அகப்பொருள்’ எனப்படும்.
அகப்பொருள் நூல்கள் தமிழிற் பல உள்ளன. ஆயினும்,
‘அகம்’ என்றே பெயரமைந்த பழைய இலக்கிய நூல்
இப்போது ஒன்றே உள்ளது. அது தான் ‘அகநானூறு’
என்பது.
கடைச்சங்க
காலத்தில் எட்டுத்தொகை நூல்களுன் அகநானூறும்
ஒன்று. நானூறு அகவற் பாட்டுக்கால் ஆனது; புலவர்
பலரால் இயற்றப்பட்டு, மதுரை உப்பூரிகுடிகிழான்
மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கபபட்டது.
அகநானூறு
மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் நூற்றிருபது
பாட்டுக்கள் ‘களியாற்றினை நிரை’ எனப்படும்.
அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் ‘மணிமிடைபவளம்’
எனப்படும். கடைசி நூறு பாட்டுக்கள் ‘நித்திலக்கோவை’
எனப்படும்.
இந் நூலுக்குப்
பழைய உரை உண்டு. அது, முதல் 90 பாட்டுகட்கு மட்டும்
குறிப்புரையாக இருக்கின்றது. அடுத்து 70 பாட்டுகட்கு
அந்நானூற்றின் முதற்பதிப்பாசிரியரான திரு. வே.
இராஜகோபாலாச்சாரியார் உரை
எழுதியிருக்கின்றார். ஆதலால் நூல் முழுமைக்கும்
ஒரே வகையாகத் தெள்ளிய உரையொன்று எழுதி
வெளிவரவேண்டிய இன்றியமையாமை இந் நூலுக்கு
நெடுங்காலமாக இருந்து வந்தது.
அக்
குறையினை நீக்கும்பொருட்டு, இப்போது, தஞ்சை
நாவலர், திரு. ந. மு. வேங்கடசாமி
நாட்டாரவர்களும், கரந்தைக் கவியரசு, ரா.
வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து
இந்நூல் முழுமைக்கும் முயன்று உரை யெழுதி யுதவினர்.
செய்யுட்களைப்
பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக்
கொடுத்துப் பின்பு பொருள் செல்லும் நெறிக்கு
ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு, அதன்மேல்
முடிவும் விளக்கவுரையும் எழுதி, உள்ளுறை புலப்படுத்தி,
மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக்
குறிப்புக்களுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது.
முதற்கண்
‘களியாற்றினை நிரை’ என்னும் முதற்பகுதி ஒரு
தனிப் புத்தகமாக வெளியிடப்பெற்றது. பின்பு,
இரண்டாம் பகுதியாகிய ‘மணிமிடை பவளமும்’ ஒரு
தனிப் புத்தகமாக வெளிவந்தது. இப்போது இறுதிப்
பகுதியாகிய ‘நித்திலக் கோவை’யும் தனியாக
வெளிவருகின்றது. ஒவ்வொன்றன் இறுதியிலும் பாட்டு
முதற் குறிப்பும், ஆசிரியர் பெயர் வரிசையும்
கொடுக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில், அகநானூறு
முழுப் புத்தகமாக வெளிவரும்போது நூல் வரலாறு, உரை
வரலாறு, அரும்பொருட் குறிப்புகளும்
சேர்க்கப்பெறும்.
மு.
காசிவிசுவநாதன்.
|