மருதம் |
|
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
|
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
|
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
|
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
|
5
|
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
|
|
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
|
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
|
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
|
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
|
10
|
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
|
|
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
|
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
|
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
|
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
|
15
|
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
|
|
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
|
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
|
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
|
20
|
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
|
|
இளமை சென்று தவத் தொல்லஃதே;
|
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி,
எமக்கே?
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
|
|
|
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
|
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
|
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
|
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
|
5
|
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
|
|
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
|
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
|
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
|
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
|
10
|
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
|
|
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச்
செல்லேன்,
|
|
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
|
|
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
|
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ
|
15
|
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
|
|
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
|
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
|
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
|
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?
|
பரத்தையர் சேரியினின்றும்
வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்'
என்றாற்குத் தலைமகள் சொல்லியது. -
சாகலாசனார்
|
|
|
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
|
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
|
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
|
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
|
5
|
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
|
|
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
|
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
|
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
|
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
|
10
|
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
|
|
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
|
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
|
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
|
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
|
15
|
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
|
|
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
|
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
|
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
|
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
|
20
|
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
|
|
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
|
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
|
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
|
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
|
25
|
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
|
|
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
|
தலைமகன் தோழியை வாயில்
வேண்டி, அவளால் தான் வாயில்
பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய
தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - பாண்டியன்
கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
|
|
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
|
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
|
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
|
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
|
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
|
5
|
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
|
|
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
|
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
|
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
|
10
|
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
|
|
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
|
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
|
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
|
15
|
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
|
|
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
|
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர்
நன் முல்லையார்
|
|
|
நகை ஆகின்றே தோழி! நெருநல்
|
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
|
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
5
|
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
|
|
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
|
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
|
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
|
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
|
10
|
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
|
|
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்
இட்டு,
|
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
|
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
|
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
|
15
|
என்னும் தன்னும் நோக்கி,
|
|
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
|
பரத்தை மனைக்குச்
செல்கின்ற பாணன் தன் மனைக்கு
வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
|
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
|
|
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
|
|
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
|
|
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
|
5
|
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
|
|
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
|
|
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
|
|
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
|
|
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
|
10
|
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
|
|
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
|
|
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
|
|
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது,
|
|
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
|
15
|
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக்
|
|
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
|
|
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
|
|
தானே புகுதந்தோனே; யான் அது
|
|
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
|
20
|
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச்
சென்று
|
|
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
|
|
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
|
|
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
|
|
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
|
25
|
பழங் கணோட்டமும் நலிய,
|
|
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே.
|
பரத்தையிற் பிரிந்த
தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன்
கண்ணனார்
|
|
உரை |
|
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
|
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
|
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
|
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
|
5
|
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
|
|
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
|
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
|
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
|
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
|
10
|
ஆதிமந்தி பேதுற்று இனைய,
|
|
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
|
|
அம் தண் காவிரி போல,
|
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.
|
'தலைமகனை நயப்பித்துக்
கொண்டாள்' என்று கழறக் கேட்ட
பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப,
சொல்லியது. - பரணர்
|
|
|
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
|
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
|
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
|
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
|
5
|
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
|
|
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
|
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
|
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
|
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
|
10
|
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
|
|
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
|
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
|
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
|
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
|
15
|
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
|
|
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
|
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
|
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
|
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
|
20
|
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
|
|
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
|
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
|
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
|
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
|
25
|
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
|
|
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
|
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
|
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
|
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
|
30
|
மடம் கொள் மதைஇய நோக்கின்,
|
|
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
|
வாயில் மறுத்த தோழிக்குத்
தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி
இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது
சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர்
கிழார்
|
|
|
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
|
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
|
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
|
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
|
5
|
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
|
|
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
|
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
|
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
|
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
|
10
|
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
|
|
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
|
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
|
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
|
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
|
15
|
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
|
|
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
|
|
களிறு கவர் கம்பலை போல,
|
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.
|
தோழி வாயில் மறுத்தது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
|
|
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
|
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
|
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
|
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
|
5
|
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
|
|
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
|
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
|
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
|
|
உலமந்து வருகம் சென்மோ தோழி!
|
10
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
|
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
|
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
|
தலைமகள் தன்னைப்
புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப்
பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி
வங்கனார்
|
|
|
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
|
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
|
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
|
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
|
5
|
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
|
|
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
|
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
|
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
|
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
|
10
|
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
|
|
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும்,
கையிகந்து
|
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
|
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
|
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
|
15
|
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
|
|
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
|
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
|
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
|
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
|
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
|
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
|
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
|
5
|
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
|
|
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
|
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
|
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
|
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
|
10
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
|
|
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
|
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
|
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
|
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
|
15
|
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
|
|
திதியனொடு பொருத அன்னி போல
|
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
|
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
|
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
|
20
|
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
|
|
மின் நேர் மருங்குல், குறுமகள்
|
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம்
ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
நக்கீரர்
|
|
|
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண்
சோறு
|
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
|
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
|
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
|
5
|
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
|
|
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
|
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
|
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
|
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
|
10
|
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
|
|
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
|
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
|
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
|
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
|
15
|
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
|
|
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
|
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
|
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
|
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
|
20
|
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
|
|
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி
வியர்
|
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
|
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
|
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
|
25
|
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
|
|
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
|
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
|
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
|
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்
|
|
|
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
|
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
|
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
|
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
|
5
|
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
|
|
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
|
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
|
|
யார்கொல் அளியள்தானே எம் போல்
|
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
|
10
|
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
|
|
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
|
|
ஆயமும் அயலும் மருள,
|
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
பாணற்குத் தலைமகள் வாயில்
மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
|
|
|
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
|
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
|
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்
கதிர்
|
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
|
5
|
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
|
|
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
|
|
தீம் புனல் ஊர! திறவதாகக்
|
|
குவளை உண்கண் இவளும் யானும்
|
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
|
10
|
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
|
|
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
|
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
|
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக
|
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக்
கிடாஅய்
|
15
|
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
|
|
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
|
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த
தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர்
மூலங்கிழார்
|
|
உரை |
|
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
|
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
|
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
|
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
|
5
|
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை,
|
|
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
|
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
|
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
|
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என
|
10
|
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின்,
|
|
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
|
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
|
|
புதுவது வந்த காவிரிக்
|
15
|
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?
|
பரத்தையொடு புனலாடிய
தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான்
ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட
பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப,
சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்
|
|
|
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
|
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
|
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
|
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
|
5
|
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
|
|
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
|
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
|
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
|
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
|
10
|
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
|
|
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
|
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
|
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
|
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
|
15
|
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
|
|
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
|
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
|
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
|
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
|
20
|
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
|
|
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
|
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
|
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
|
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
|
25
|
கூர்நுனை மழுகிய எயிற்றள்
|
|
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. மருதம் -
பாடிய இளங்கடுங்கோ |
|
|
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
|
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து
ஈர்க்கும்
|
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
|
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
|
5
|
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும்
|
|
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும்
ஊரனொடு
|
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
|
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
|
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
|
10
|
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
|
|
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
|
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
|
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
|
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
|
15
|
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
|
|
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
|
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
|
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
|
|
திரு நுதல் பசப்ப நீங்கும்
|
20
|
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பத், இல்லிடைப் பரத்தை சொல்லி
நெருங்கியது. -பரணர்
|
|
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
|
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
|
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
|
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்
பாட்டி
|
5
|
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
|
|
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
|
|
விடியல் வைகறை இடூஉம் ஊர!
|
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
|
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
|
10
|
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்
போகிய,
|
|
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
|
|
அன்னிமிஞிலியின் இயலும்
|
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
|
|
|
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
|
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
|
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
|
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும்
புறம்,
|
5
|
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
|
|
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
|
10
|
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
|
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
|
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
|
15
|
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
|
|
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்
மகள்
|
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
|
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
|
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
|
5
|
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
|
|
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
|
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
|
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
|
|
கழனி உழவர் குற்ற குவளையும்,
|
10
|
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
|
|
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
|
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
|
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
|
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
|
15
|
பெருங் களிற்று எவ்வம் போல,
|
|
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப்
பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
|
|
|
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
|
|
நாண் இலை மன்ற யாணர் ஊர!
|
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
|
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
|
5
|
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
|
|
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
|
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
|
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
|
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
|
10
|
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
|
|
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
|
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
|
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
|
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
|
15
|
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
|
|
போர் அடு தானைக் கட்டி
|
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
|
தலைமகற்குத் தோழி வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
|
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
|
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி,
|
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
|
5
|
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல்
சூட்டுப்
|
|
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
|
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
|
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
|
|
காமம் பெருமை அறியேன், நன்றும்
|
10
|
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்
|
|
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
|
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
|
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
|
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த
மொய்ம்பின்,
|
15
|
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,
|
|
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
|
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
|
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
|
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
|
20
|
ஆதிமந்தி போல,
|
|
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க
தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
|
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
|
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
|
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர!
|
5
|
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு
|
|
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
|
|
ஆடினை என்ப, நெருநை; அலரே
|
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க்
கரிகால்
|
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
|
10
|
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
|
|
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
|
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
|
|
மொய் வலி அறுத்த ஞான்றை,
|
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
|
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
|
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
|
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
|
5
|
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
|
|
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
|
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
|
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
|
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
|
10
|
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
|
|
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
|
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
|
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
|
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
|
15
|
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க்
கள்ளூர்,
|
|
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
|
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற
|
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
|
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
|
20
|
நீறு தலைப்பெய்த ஞான்றை,
|
|
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகற்கு வாயின்
மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன்
மள்ளனார்
|
|
|
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
|
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
|
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
|
5
|
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
|
|
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
|
|
நோக்குதொறும் நோக்குதொறும்
தவிர்விலையாகி,
|
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
|
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
|
10
|
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
|
|
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
|
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
|
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
|
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
|
15
|
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
|
|
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
|
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
|
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
|
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
|
20
|
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
|
|
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
|
பரத்தையிற் பிரிந்து வந்து
கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
-பரணர்
|
|
|
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
|
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
|
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
|
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
|
5
|
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
|
|
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
|
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
|
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
|
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
|
10
|
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,
|
|
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
|
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
|
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன்
பொருள்போல்,
|
|
பரந்து வெளிப்படாது ஆகி,
|
15
|
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்
|
|
|
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
|
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
|
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
|
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
|
5
|
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த
|
|
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
|
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
|
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
|
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
|
10
|
அறனும் பொருளும் வழாமை நாடி,
|
|
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
|
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
|
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
|
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
|
15
|
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
|
|
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
|
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?
|
'வரைந்து எய்துவல்' என்று
நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக்
கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக்
கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத
்தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. -
ஓரம்போகியார்
|
|
|
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
|
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
|
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
|
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
|
5
|
பெரு நீர் வையை அவளொடு ஆடி,
|
|
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
|
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
|
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
|
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
|
10
|
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல்
|
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
|
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
|
|
மலிதரு கம்பலை போல,
|
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.
|
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி
சொல்லியது. -மதுரைப் பேராலவாயார்
|
|
|
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
|
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
|
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
|
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
|
5
|
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
|
|
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
|
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
|
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
|
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
|
10
|
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி
|
|
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
|
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி.
|
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
|
|
ஊடினள் சிறு துனி செய்து எம்
|
15
|
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.
|
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார்
|
|
உரை |
|
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
|
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
|
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
|
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
|
5
|
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
|
|
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
|
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
|
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
|
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
|
10
|
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ
|
|
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
|
|
அது புலந்து உறைதல் வல்லியோரே,
|
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
|
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
|
15
|
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,
|
|
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
|
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த
தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது.
-ஓரம்போகியார்
|
|
உரை |
|
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி,
|
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு
நுதல்,
|
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர்
|
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
|
5
|
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில்,
|
|
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன
|
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து,
|
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
|
|
இழை அணி யானைச் சோழர் மறவன்
|
10
|
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை,
|
|
புனல் மலி புதவின், போஒர் கிழவோன்,
|
|
பழையன் ஓக்கிய வேல் போல்,
|
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
உரை |
|
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
|
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
|
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
|
5
|
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
|
|
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
|
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
|
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
|
|
காஞ்சி நீழல் குரவை அயரும்
|
10
|
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
|
|
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
|
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
|
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
|
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
|
15
|
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
|
|
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
|
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
|
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
|
|
என்னொடு திரியானாயின், வென் வேல்
|
20
|
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
|
|
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
|
|
ஆரியர் படையின் உடைக, என்
|
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
|
நயப் புப்பரத்தை இற்
பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது. - பாவைக் கொட்டிலார்
|
|
உரை |
|
நகை நன்று அம்ம தானே இறை மிசை
|
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
|
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
|
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
|
5
|
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
|
|
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
|
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
|
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
|
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
|
10
|
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்
|
|
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
|
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
|
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
|
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
|
15
|
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
|
|
எம் மனை வாராயாகி, முன் நாள்,
|
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
|
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
|
|
இழை அணி யானைப் பழையன் மாறன்,
|
20
|
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
|
|
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
|
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
|
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
|
|
ஏதில் மன்னர் ஊர் கொள,
|
25
|
கோதை மார்பன் உவகையின் பெரிதே.
|
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது. - நக்கீரர்
|
|
உரை |
|
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
|
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
|
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
|
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
|
5
|
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
|
|
பொற் தொடி முன்கை பற்றினனாக,
|
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
|
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
|
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
|
10
|
கற் போல் நாவினேனாகி, மற்று அது
|
|
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
|
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
|
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
|
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
|
15
|
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,
|
|
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
|
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
|
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
|
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
|
20
|
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?
|
பின்னின்ற தலைமகற்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக்
கூறியது.-பரணர்
|
|
உரை |
|
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
|
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு
அழித்து,
|
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
|
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
|
5
|
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
|
|
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
|
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின்,
சினைஇ,
|
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
|
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
|
10
|
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
|
|
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
|
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
|
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல்
அரிவையொடு,
|
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
|
15
|
நீ தற் பிழைத்தமை அறிந்து,
|
|
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
உரை |
|
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன்
உடையென்மன்
|
|
கல்லா யானை கடி புனல் கற்றென,
|
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
|
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
|
5
|
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
|
|
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
|
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
|
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
|
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
|
10
|
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
|
|
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
|
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
|
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
|
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
|
15
|
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
|
|
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும்,
பொற்புடைக்
|
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
|
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை புலந்து
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
|
|
வாளை நாள் இரை தேரும் ஊர!
|
|
நாணினென், பெரும! யானே பாணன்
|
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
|
5
|
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
|
|
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து
ஒழிந்த
|
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
|
|
கணையன் நாணியாங்கு மறையினள்
|
|
மெல்ல வந்து, நல்ல கூறி,
|
10
|
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
|
|
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
|
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
|
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
|
|
நுதலும் கூந்தலும் நீவி,
|
15
|
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
|
தோழி வாயில் மறுத்தது;
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
உரை |
|
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித்
தேர்ப்
|
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
|
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
|
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
|
5
|
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
|
|
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
|
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
|
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
|
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
|
10
|
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
|
|
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
|
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
|
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
|
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு,
நின்
|
15
|
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
|
|
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
|
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
|
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
|
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை தலைமகற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
மேல் |