அடை நெடுங் கல்வியார்

283
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்
பௌவ உறை அளவா,
............................................. வி மயக்கி,
5
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம் புரி கோசர் அவைக் களத்தானும்,
மன்றுள் என்பது கெட...
...........................................ானே பாங்கற்கு
10
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க,
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர,
தெற்றிப் பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் நன்று புரப்ப,
............................................ண்ட பாசிலைக்
15
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே.

திணை தும்பை; துறை பாண் பாட்டு.
அடை நெடுங் கல்வியார் பாடியது.

344
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை,
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ
5
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து,
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி..................
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே.

திணையும் துறையும் அவை.
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.

345
களிறு அணைப்பக் கலங்கின, காஅ,
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன;
5
தெறல் மறவர் இறை கூர்தலின்,
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,
10
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை,
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி,
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என;
15
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ!
என் ஆவது கொல்தானே
20
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.