ஒக்கூர் மாசாத்தியார்

279
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
5
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
10
ஒரு மகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!

திணை வாகை; துறை மூதில் முல்லை.
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.