கல்லாடனார்

23
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
5
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
10
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
15
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
20
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.

திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

25
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு,
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு,
5
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய!
10
முலை பொலி ஆகம் உருப்ப நூறி,
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவனைக் கல்லாடனார் பாடியது.

371
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது,
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி,
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி,
5
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய்
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப,
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி,
10
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப,
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி,
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து,
15
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை,
20
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும!
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி,
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள்,
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து
25
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என,
உரு கெழு பேய்மகள் அயர,
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே!

திணையும் துறையும் அவை.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

385
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி,
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி,
5
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை
நீல் நிறச் சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே;
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்,
10
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய
வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!

திணை அது; துறை வாழ்த்தியல்.
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.

391
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப்
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற
5
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி,
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென,
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி
10
நன............................................வினவலின்,
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என,
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற,
காண்கு வந்திசின், பெரும!...........................
15
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும்
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின்,
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு,
இன் துயி........................... ஞ்சால்
20
துளி பதன் அறிந்து பொழிய,
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே!

திணை அது; துறை கடைநிலை.
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.