கழாத்தலையார்

62
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது?
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
5
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க,
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே;
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே;
10
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை,
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர,
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார்,
15
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே;
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே!

திணை தும்பை; துறை தொகை நிலை.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.

65
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப,
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
5
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
10
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு,
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே.

திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.

270
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே
5
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே! பேரில் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரு மறவர்
10
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை,
விழு நவி பாய்ந்த மரத்தின்,
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.
திணை கரந்தை; துறை கையறு நிலை.

(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
கழாத்தலையார் பாடியது.

288
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க,
5
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை ...................................... மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

திணை தும்பை; துறை மூதில் முல்லை.
கழாத்தலையார் பாடியது.

289
ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
5
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
10
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?

திணை ...............; துறை ................முல்லை.
கழாத்தலையார் பாடியது.

368
களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல,
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே;
5
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி,
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே;
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி,
வளி வழக்கு அறுத்த வங்கம் போல,
10
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி,
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து,
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ!
கடாஅ யானைக் கால்வழி அன்ன என்
15
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி,
பாடி வந்தது எல்லாம், கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே.

திணை வாகை; துறை மறக்களவழி.
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.