காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

57
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின்,
5
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க;
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
10
கடிமரம் தடிதல் ஓம்பு நின்
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே.

திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

58
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
5
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
10
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
15
நீல் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;
20
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
25
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்
30
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.

திணை பாடாண் திணை; துறை உடனிலை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

169
நும் படை செல்லும்காலை, அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ,
அவர் படை வரூஉம்காலை, நும் படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
5
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்,
10
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மரக் கம்பம் போல,
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

171
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
5
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
10
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
15
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.

353
ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்,
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ,
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி,
5
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை,
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்!
'யார் மகள்?' என்போய்; கூறக் கேள், இனி:
குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு
நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை
10
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத்
தொல் குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மா முது வேந்தர்க்கு
.............................................
............................................. உழக்கிக் குருதி ஓட்டி,
15
கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு,
பஞ்சியும் களையாப் புண்ணர்,
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே.

திணையும் துறையும் அவை.
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.