சோழன் நலங்கிள்ளி

73
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி,
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து;
5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழை தின் யானைக் கால் அகப்பட்ட
10
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண்
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.

75
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென,
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக்
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
5
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே;
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர்
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
10
நொய்தால் அம்ம தானே மை அற்று,
விசும்புற ஓங்கிய வெண் குடை,
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.