புறத்திணை நன்னாகனார்

176
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
5
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர்
10
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல,
காணாது கழிந்த வைகல், காணா
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.

திணையும் துறையும் அவை.
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

 
376
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச்
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ,
5
பாணர் ஆரும்அளவை, யான் தன்
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்;
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென,
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற,
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத்
10
தொன்று படு துளையொடு பரு இழை போகி,
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி,
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு,
15
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே,
இரவினானே, ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
20
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி,
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி,
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே.

திணை அது; துறை இயன்மொழி.
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

379
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நா இசை நுவறல்;
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து,
5
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும்
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம்; பெரும!
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர்
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா,
10
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என,
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற,
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது,
விண் தோய் தலைய குன்றம் பின்பட,
......................................ர வந்தனென், யானே
15
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத்
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே.

திணை அது; துறை பரிசில் துறை.
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

384
மென்பாலான் உடன் அணைஇ,
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன்பாலான் கருங் கால் வரகின்
5
............................................
அம் கண் குறு முயல வெருவ, அயல
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து;
விழவு இன்றாயினும், உழவர் மண்டை
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து;
10
.............................................கிணையேம், பெரும!
நெல் என்னா, பொன் என்னா,
கனற்றக் கொண்ட நறவு என்னா,
.....................மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
15
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை,
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கி,
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை.....
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு
20
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்,
தின்ற நண் பல் ஊன் தோண்டவும்,
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறியேனே.

திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.