பொத்தியார்

217
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
5
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக,
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்;
'வருவன்' என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே;
10
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவதுகொல்? அளியது தானே!

திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.

220
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த
பெருங் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு,
5
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.

221
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;
5
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத் தக்கோனை,
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
10
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க,
கெடு இல் நல் இசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே.

திணையும் துறையும் அவை.
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.

222
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என,
என் இவண் ஒழித்த அன்பிலாள!
5
எண்ணாது இருக்குவை அல்லை;
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே!

திணையும் துறையும் அவை.
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.

223
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி,
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி,
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு
5
இன் உயிர் விரும்பும் கிழமைத்
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே.

திணையும் துறையும் அவை.
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.