மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

56
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
5
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
10
தோலா நல் இசை, நால்வருள்ளும்,
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
15
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
20
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
25
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

திணை அது; துறை பூவை நிலை.
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

189
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
5
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

திணையும் துறையும் அவை.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.