மதுரைப் பூதன் இளநாகனார்

276
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்,
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை,
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன்,
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
5
குடப் பால் சில் உறை போல,
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.

திணை அது; துறை தானை நிலை.
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.