மருதன் இளநாகனார்

52
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
5
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
10
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
15
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!

திணையும் துறையும் அவை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

138
ஆனினம் கலித்த அதர் பல கடந்து,
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீந்தி,
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
5
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை,
'மாறி வா' என மொழியலன் மாதோ;
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
10
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே?

திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

139
சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
5
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி,
10
கனி பதம் பார்க்கும் காலை அன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள்,
அருஞ் சமம் வருகுவதுஆயின்,
15
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.