மாங்குடி கிழார்

24
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;
திண் திமில் வன் பரதவர்
5
வெப்பு உடைய மட்டு உண்டு,
தண் குரவைச் சீர் தூங்குந்து;
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;
10
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீம் சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
15
தீம் நீரொடு உடன் விராஅய்,
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
20
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது
25
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
30
இரவல் மாக்கள் ஈகை நுவல,
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,
35
மலர் தலை உலகத்துத் தோன்றி,
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.

திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

26
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
5
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வௌவி,
முடித் தலை அடுப்பு ஆக,
புனல் குருதி உலைக் கொளீஇ,
10
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
15
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே.

திணையும் துறையும் அவை.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

313
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ;
5
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.

திணை அது; துறை வல்லாண் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.

335
அடல் அருந் துப்பின்....................
...................குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,
5
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,
10
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

திணையும் துறையும் அவை.
மாங்குடி கிழார் பாடியது.

372
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி,
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை,
5
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த,
10
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப்
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

396
கீழ் நீரான் மீன் வழங்குந்து;
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து;
கழி சுற்றிய விளை கழனி,
அரிப் பறையான் புள் ஓப்புந்து;
5
நெடுநீர் கூஉம் மணல் தண் கான்
மென் பறையான் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீம் தேறல் நறவு மகிழ்ந்து,
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து;
10
உள் இலோர்க்கு வலி ஆகுவன்,
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன்,
கழுமிய வென் வேல் வேளே,
வள நீர் வாட்டாற்று எழினியாதன்;
கிணையேம், பெரும!
15
கொழுந் தடிய சூடு என்கோ?
வள நனையின் மட்டு என்கோ?
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்த கூட்டுமுதல்
20
முகந்து கொள்ளும் உணவு என்கோ?
அன்னவை பல பல
.............................................ருநதய
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;
25
எம்மோர் ஆக்கக் கங்குண்டே;
மாரி வானத்து மீன் நாப்பண்,
விரி கதிர வெண் திங்களின்,
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
30
நிரைசால் நன் கலன் நல்கி,
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே!

திணையும் துறையும் அவை.
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.