முகப்பு | தொடக்கம் |
எழினி |
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
230 |
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், |
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், |
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், |
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், |
|
5 |
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், |
பொய்யா எழினி பொருது களம் சேர |
|
ஈன்றோள் நீத்த குழவி போல, |
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, |
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு |
|
10 |
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி |
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! |
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், |
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு |
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், |
|
15 |
நேரார் பல் உயிர் பருகி, |
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. |
|
திணை அது; துறை கையறு நிலை.
| |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|