பாரி மகளிர்

113
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
5
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று,
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.

திணையும் துறையும் அவை.
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.

200
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து,
5
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்,
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை,
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே!
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
10
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;
15
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!

திணை அது; துறை பரிசில் துறை.
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

201
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை,
படு மணி யானை, பறம்பின் கோமான்
5
நெடு மாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே.
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
10
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே!
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய
15
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல்
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல்
உடலுநர் உட்கும் தானை,
20
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

202
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர,
கடிய கதழும் நெடு வரைப் படப்பை
5
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்,
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்!
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர்
15
கை வண் பாரி மகளிர்' என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும!
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து,
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல்
20
இரும் புலி வரிப் புறம் கடுக்கும்
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.

236
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
5
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி,
இனையைஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே; ஆயினும்,
10
இம்மை போலக் காட்டி, உம்மை
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!

திணை அது; துறை கையறுநிலை.
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.

337
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்,
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்,
வரல்தோறு அகம் மலர,
5
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப்
பாரி பறம்பின் பனிச் சுனை போல,
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென
10
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே,
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி,
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும்
15
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென
20
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல சுணங்கு அணிந்த
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே?

திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.