முகப்பு | தொடக்கம் |
வல்வில் ஓரி |
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
153 |
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும், |
|
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், |
|
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, |
|
அடு போர் ஆனா, ஆதன் ஓரி |
|
5 |
மாரி வண் கொடை காணிய, நன்றும் |
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; |
|
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை |
|
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், |
|
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, |
|
10 |
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக் |
கூடு கொள் இன் இயம் கறங்க, |
|
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
204 |
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், |
|
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; |
|
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், |
|
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; |
|
5 |
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் |
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; |
|
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, |
|
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும், |
|
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; |
|
10 |
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, |
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் |
|
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில் |
|
கருவி வானம் போல |
|
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
|