வெளிமான்

162
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
5
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

திணை அது; துறை பரிசில் விடை.
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,

237
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
15
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
20
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை.
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

238
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி,
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
5
காடு முன்னினனே, கள் காமுறுநன்;
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி,
பாடுநர் கடும்பும் பையென்றனவே;
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே;
10
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப,
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே?
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின்,
15
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக்
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு,
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து,
அவல மறு சுழி மறுகலின்,
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே.

திணையும் துறையும் அவை.
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.