நொச்சி

109
அளிதோதானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
5
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,
10
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே:
15
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.

திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
அவனை அவர் பாடியது.

110
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
5
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே.

திணையும் துறையும் அவை.
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.

111
அளிதோ தானே, பேர் இருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

271
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை,
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே,
5
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து,
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே!

திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

272
மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி!
போது விரி பல் மரனுள்ளும் சிறந்த
காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே!
கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த
5
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.

திணையும் துறையும் அவை.
மோசி சாத்தனார் பாடியது.

299
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,
5
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே.

திணை நொச்சி; துறை குதிரை மறம்.
பொன்முடியார் பாடியது.