திணை மறைந்து போன பாடல்கள்

244
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா;

விறலியர் முன்கையும் தொடியின் பொலியா;
இரவல் மாக்களும்... ... ... ... ... ... ... ... ... ...

267

267
(இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை.)

268

268
(இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை.)

282
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின்,
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை,
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின்,
.............................................................................................
5
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அருங் கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே;
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத்
.......................................................................................
10
அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது, களத்து ஒழியாதே;
சேண் விளங்கு நல் இசை நிறீஇ,
நா நவில் புலவர் வாய் உளானே.

திணை ...................
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

289
ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
5
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
10
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?

திணை ...............; துறை ................முல்லை.
கழாத்தலையார் பாடியது.

323
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
5
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே.

........................................................
................டார் கிழார் பாடியது.

324
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை,
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள்
5
ஊக நுண் கோல் செறித்த அம்பின்,
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர்,
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
10
வெண் காழ் தாய வண் கால் பந்தர்,
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தர்க்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே.

திணையும் துறையும் அவை.
ஆலத்தூர் கிழார் பாடியது.

325
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்,
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென,
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்,
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
5
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
10
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்,
15
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.

திணையும் துறையும் அவை.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

355
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்று மேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே:
.............................................................................

......................................................................
......................................................................

361
கார் எதிர் உருமின் உரறி, கல்லென,
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
5
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈத்து,
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள் நடை ........................£ன்றதன்
10
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,
புரி மாலையர் பாடினிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொ............ மான் நோக்கின்,
15
வில் என விலங்கிய புருவத்து, வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
............................................பொலங்கலத்து ஏந்தி,
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன்,
20
நில்லா உலகத்து............... மை நீ
சொல்ல வேண்டா................. முந்தறிந்த

....................................................................................
...............................................னார் பாடியது.