நெல்லி

91
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி!
5
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
10
ஆதல் நின் அகத்து அடக்கி,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.

170
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
5
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
10
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
15
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.

திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

314
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்,
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை,
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை,
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க்
5
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து
நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே தன் இறை விழுமுறினே.

திணையும் துறையும் அவை.
ஐயூர் முடவனார் பாடியது.