மருதமரம் (மருது)

52
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
5
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
10
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
15
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!

திணையும் துறையும் அவை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

243
இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
5
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக,
கரையவர் மருள, திரைஅகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
10
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?

திணையும் துறைஉம் அவை.
தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது.

351
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும்,
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும்,
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென,
கடல் கண்டன்ன கண் அகன் தானை
5
வென்று எறி முரசின் வேந்தர், என்றும்,
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப்
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை
10
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின்,
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே?

திணையும் துறையும் அவை.
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.