வேங்கை

108
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு,
5
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

120
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து,
பூழி மயங்கப் பல உழுது, வித்தி,
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக்
5
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி,
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரிய,
10
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு,
15
பெருந்தோள் தாலம் பூசல் மேவர,
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர்
பாடி ஆனாப் பண்பின் பகைவர்
20
ஓடு கழல் கம்பலை கண்ட
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

129
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
5
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

137
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
5
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
10
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
15
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!

திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

224
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,
5
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு,
பருதி உருவின் பல் படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
10
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்:
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,
15
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.

திணையும் துறையும் அவை.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

265
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,
5
கல் ஆயினையே கடு மான் தோன்றல்!
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.

திணையும் துறையும் அவை.
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.

352
தேஎம் கொண்ட வெண் மண்டையான்,
வீ...................................................................கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து;
5
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்,
புற வாயால் புனல் வள
............................................................ நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
10
உறந்தை அன்ன உரைசால் நன் கலம்
கொடுப்பவும் கொளாஅனெ
.......................ர் தந்த நாகு இள வேங்கையின்,
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
15
சிறு கோல் உளையும் புரவி ª..................
...................................................................... யமரே.

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

390
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து ஆயிவாளர்,
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ்,
.........................................................மன்ன முற்றத்து,
5
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்,
10
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின்
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என,
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
15
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி,
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை
20
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற,
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி,
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்;
25
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி,
.............................................................................................................................
வான் அறியல என் பாடு பசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே!

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.