அத்தி (ஆர்)

45
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
5
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே.

திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.

338
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின்,
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின்,
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன,
5
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் வரினும், தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
10
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே.

திணையும் துறையும் அவை.
குன்றூர் கிழார் மகனார் பாடியது.