ஆம்பல்

16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.

திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

209
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல்
5
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி,
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று,
10
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்;
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள்
15
குறு நணி காண்குவதாக நாளும்,
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி,
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்,
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

248
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்!
இளையமாகத் தழை ஆயினவே;
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
5
அல்லிப் படூஉம் புல் ஆயினவே.

திணை அது; துறை தாபத நிலை.
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.